முகத்தைப்போல பாதத்தைப் பார் சர்க்கரை நோயாளிகளுக்கான மந்திரம்

Description:

இந்த அதிவேகமான உலகில், நீண்ட நேரம் லேப்டாப், மொபைல் போனில் செலவிட முடிகிறது ஆனால், தங்கள் உடல் நலத்தில் கவனம் செலுத்த யாருக்கும் நேரம் இல்லை. இதுதான் இன்றைக்குப் பல்வேறு நோய்கள் அதிகரித்துள்ளதற்கு முக்கியக் காரணம்.

சர்க்கரை நோயை மற்ற எல்லா நோய்களுக்கும் நுழைவு வாயில் என்று சொல்லலாம். சர்க்கரை நோய் வந்துவிட்டால் அதைச் சரி செய்ய முடியாது. வாழ்நாள் முழுக்கச் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க டயட், மருந்து, உடற்பயிற்சி என்று இருக்க வேண்டும். சர்க்கரையைக் கட்டுக்குள் வைக்கத் தவறினால், பார்வை இழப்பு, சிறுநீரகச் செயல் இழப்பு, இதய நோய்கள் என அது வரிசையாகப் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.

சர்க்கரை நோய் வந்துவிட்டாலே புண்கள் குணமாகாது என்ற கருத்து மக்கள் மத்தியில் உள்ளது. உண்மையும் கூட… இன்றைக்கு விபத்துக்கு அடுத்தபடியாகக் கால்கள் அகற்றும் அறுவைசிகிச்சையானது சர்க்கரை நோயாளிகளுக்குத்தான் நடக்கிறது. இந்தநிலையில், சென்னையில் சர்க்கரை நோயால் கால் மற்றும் பாதங்களில் ஏற்படக் கூடிய பாதிப்புகள், அதற்கான சிகிச்சை முறை குறித்து டயாபடிக் ஃபுட் சொஸைட்டி ஆஃப் இந்தியா ஏற்பாடு செய்திருந்த டாக்டர்களுக்கான மாநாடு நடந்தது. மாநாட்டு ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவரான டாக்டர் நாராயண மூர்த்திக் கூறுகையில்…

“சர்க்கரை நோயாளிகளுக்கு நரம்பு மண்டலம் பாதிக்கப்படுகிறது. காலில் நரம்பு மண்டலம் உணர்ச்சி இழக்கும்போது, வலி உணர்வு ஏற்படாது. இதனால், காலில் காயம் ஏற்பட்டால் அவர்களுக்குத் தெரிவதில்லை. சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதாலும், பாதத்துக்கு ரத்தத்தைக் கொண்டு செல்லும் ரத்தக் குழாய் சிதைவடைவதாலும் போதுமான அளவு ஆக்சிஜன் கிடைப்பதில்லை. இதனால்தான் புண் ஆறத் தாமதம் ஆகிறது.

சர்க்கரை நோயாளிகளில் 15 சதவிகிதம் பேருக்கு நியுரோபதி ஏற்படுகிறது. 10 சதவிகித சர்க்கரை நோயாளிகளுக்குக் கால் புண் ஏற்படுகின்றன. ஒரு சதவிகிதம் பேர் இதன் காரணமாகக் காலை இழக்க வேண்டிய நிலைக்கு ஆளாகின்றனர். டயாபடிக் நியூரோபதி என்றால் சர்க்கரை நோய் காரணமாக நரம்பு செயல்திறன் குறைவு என்று அர்த்தம். வாஸ்குலோபதி என்றால், ரத்தக் குழாய்கள் பாதிப்பு. இதனால்தான், சர்க்கரை நோயாளிகளைத் தங்கள் முகத்துக்கு அளிப்பது போன்ற முக்கியத்துவத்தைப் பாதத்துக்கும் அளிக்க வேண்டும் என்று சொல்கிறோம்.

O சர்க்கரை நோயாளிகள், தங்கள் காலுக்கு ஏற்ற சரியான காலணிகளை அணிய வேண்டும்.

O வெளியே செல்லும்போது காலணி அணியாமல் செல்லக் கூடாது.

O வெளியே சென்று வந்ததும் வெதுவெதுப்பான நீரில் கால்களைக் கழுவி, பருத்தி துணியால் ஒத்தி எடுக்க வேண்டும்.

O கால்களைச் சுத்தம் செய்த பின்னர், புண் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்று பரிசோதிக்க வேண்டும்.

O இதற்குச் சர்க்கரை நோயாளியின் குடும்பத்தினரும் உதவ வேண்டும். இல்லை என்றால், ஒரு கண்ணாடியைக் கொண்டு 360 டிகிரியும் பார்த்துக்கொள்ள வேண்டும்.

O காலில் வெடிப்பு, சிராய்ப்பு என ஏதேனும் இருந்தால் கவனத்துடன் இருக்க வேண்டும்.

O பாதத்தில் ஏதேனும் அசௌகரியம், பிரச்னை இருப்பது தெரிந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

O சர்க்கரை அளவு கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். இதற்கு மருத்துவர் பரிந்துரைத்த டயட், வொர்க்அவுட்டை பின்பற்ற வேண்டும்.

O குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரை சந்தித்துப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அப்போதுதான் சர்க்கரைக்கு எடுத்துக்கொள்ளும் மருந்து சரியா, வேறு மாற்றம் செய்ய வேண்டுமா என்று டாக்டர் பரிசீலனை செய்வார்.

இவற்றை எல்லாம் ஒழுங்காகப் பின்பற்றினால் கால் புண் பாதிப்பு மட்டுமல்ல சர்க்கரை நோயால் ஏற்படக் கூடிய மற்ற பக்க விளைவுகளும் ஏற்படாது” என்றார்.

Post a Comment