இளமைப் பருவத்தில் சரும முதிர்ச்சிக்கான தவறான செயல்கள்

Description:

இளமைப் பருவத்தை அனுபவிக்கும் முன்பே பலருக்கு முதுமைக்கான அறிகுறி தென்பட தொடங்கிவிடுகிறது. வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும், உணவு பழக்கவழக்கங்களும் முதிர்ச்சியான தோற்றத்திற்கு அவர்களை கொண்டு செல்கிறது. சரும முதிர்ச்சிக்கு காரணமான தவறான செயல்கள் பற்றி பார்ப்போம்.

அழகாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், இளமைப் பருவத்தை பொலிவுபடுத்தவேண்டும் என்பதற்காகவும் நிறைய பேர் அதிகபட்ச மேக்அப் செய்துகொள்கிறார்கள்.. அது காலப்போக்கில் சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது.

ஒப்பனைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும்போது சருமத்தில் இயற்கையாக சுரக்கும் எண்ணெய் சுரப்புக்கு இடையூறு ஏற்படுகிறது. அதனால் விரைவிலேயே சருமத்தில் சுருக்கம் ஏற்பட தொடங்கும்.

சூரிய ஒளிக்கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாக்க ‘சன் ஸ்கிரீன் லோஷன்’ போடுவதில் தவறில்லை. மதிய வேளையில் வெயிலில் வெளியே செல்லும்போது புறஊதாக்கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாப்பதற்கு மட்டுமே அதனை பூசிக்கொள்ள வேண்டும். மற்ற நேரங்களிலும் பூசிக்கொள்ளக்கூடாது. சூரிய ஒளி சருமத்தில் படாமல் இருப்பதும் சரியல்ல. தினமும் அதிகாலையில் கால் மணி நேரமாவது சூரிய ஒளி சருமத்தில் படுமாறு நிற்கவேண்டியது அவசியம்.

உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதற்காக கொழுப்பு கலந்த உணவுகளை முற்றிலுமாக தவிர்ப்பதும் நல்லதல்ல. சருமத்திற்கும், உள்ளுறுப்புகளுக்கும் கொழுப்பு அவசியமானது. அளவுக்கு அதிகமாக கொழுப்பு உணவுகளை சாப்பிடுவதுதான் கேடு விளைவிக்கும். அதேவேளையில் கொழுப்பை முழுமையாக தவிர்த்தால் சருமம் விரைவிலேயே முதிர்ச்சி அடைந்துவிடும்.

தூக்கம் தடைபடுவதும் சரும செல்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். தினமும் குறைந்தபட்சம் 7 மணி நேரமாவது தூங்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் செல்களின் வளர்ச்சி தடைபட்டு, செல்களின் இறப்பு அதிகமாகிவிடும். அதுவும் முதுமையான தோற்றத்திற்கு வித்திடும்.

கணினி சார்ந்த பணிகளில் ஈடுபடுபவர்கள் முதுகு தண்டுவடத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் நேராக அமர்ந்து பணிகளை தொடருவது அவசியம். அடிக்கடி குனிந்த படியோ, மேஜையில் கைகளை ஊன்றியபடியோ இருப்பது உடல் தோற்றத்திற்கு கேடு தரும். எலும்புகள் குறுகி தசைகள் தளர ஆரம்பித்துவிடும்.

மன அழுத்தமும் சருமத்தை பாதிக்கும். அதனால் மனகவலைகளை மறந்து மகிழ்ச்சியாக வாழ கற்றுக்கொள்ளுங்கள்.

Post a Comment