புற்று நோயாளிகளுக்கு உதவும் யோகாசனம்

Description:

இன்று சர்வதேச புற்று நோய் தினம் கடை பிடிக்கப்படுகிறது. அதே நேரத்தில் தமிழ்நாட்டில் மக்களிடம் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு போதுமானதாக இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

இது சம்பந்தமாக ‘எசோ இந்தியா’ என்ற அமைப்பின் சார்பில் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. புற்று நோய் தொடர்பாக 20 கேள்விகள் அடங்கிய கேள்விகளை பொது மக்கள் ஆயிரம் பேரிடம் கொடுத்து விடைகளை பெற்றனர்.

அதில், பொதுமக்களுக்கு புற்று நோய் தொடர்பான போதுமான தகவல்கள் தெரியவில்லை என்ற தகவல் தெரிய வந்தது.

5-ல் 2 பேர் புற்று நோய் ஒரு வகையான தொற்று நோய் என்றும், நோய் கிருமிகளால் இந்நோய் உருவாகிறது என்றும் தவறான தகவலை கூறினார்கள்.

மேலும் புற்று நோய் தொடர்பாக அதிக பய உணர்வும், தவறான தகவலும் மக்களிடம் இருப்பது தெரிய வந்தது. 3-ல் 2 பேர் உப்பு அதிகமாக சாப்பிடுவதாலும், எண்ணையை மறுபடியும் சுட வைத்து சமைப்பதாலும், வயிற்று புற்று நோய் ஏற்படுவதாக தெரிவித்தனர்.

10-ல் ஒருவருக்குதான் புற்று நோய் பற்றிய முழுமையான தகவல்கள் தெரிகிறது. அவர்கள் மரபு கோளாறினாலும் புற்று நோய் வருகிறது. ஆனாலும், புற்று நோய்க்கு மருத்துவம் இருக்கிறது என்பதை தெரிந்து வைத்திருந்தனர்.

சிலர் தினமும் 10 சிகரெட்டை 10 ஆண்டுகள் தொடர்ந்து புகைத்தாலும் அதனால் வயிற்று புற்று நோய் ஏற்படாது என்று தெரிவித்தனர்.

சென்னையை பொருத்த வரையில் வயிற்று புற்று நோய் அதிகமாக இருப்பது தெரிய வந்தது. 1 லட்சம் பேரில் 6.7 பேருக்கு வயிற்று புற்று நோய் உள்ளது.

அதே போல் நுரையீரல் புற்று நோய் 5.8 பேருக்கும், வாய் புற்று நோய் 5.5 பேருக்கும், பெருங்குடல் புற்று நோய் 4 பேருக்கும், நாக்கு புற்று நோய் 3.9 பேருக்கும் இருக்கிறது.

பெண்களை பொருத்த வரை 1 லட்சம் பேரில் 3.2 பேருக்கு வயிற்று புற்று நோய் இருக்கிறது.

அதே நேரத்தில் மார்பக புற்று நோய் 24 பேருக்கும், கருப்பை வாய் புற்று நோய் 20 பேருக்கும், கருப்பை புற்று நோய் 4.5 பேருக்கும், வாய் புற்று நோய் 3.6 பேருக்கும் இருக்கிறது.

மொத்தத்தில் தமிழ் நாட்டில் 1 லட்சம் பேரில் 12 பேருக்கு புற்று நோய் இருக்கிறது. ஆண்களோடு ஒப்பிடும் போது, பெண்கள்தான் அதிக அளவில் புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பயம் காரணமாக கடுமையான மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள்.

மேலும் அவர்களுக்கு கதிர்வீச்சு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. இதனால் தாங்க முடியாத வலியும், மன உளைச்சலும் ஏற்படுகிறது. இவற்றை தடுக்க வலி நிவாரணி மருந்துகள் வழங்கப்படுகின்றன. இவை பல பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது.

ஆனால், இவர்களுக்கு யோகாசன பயிற்சி அளித்தால் அவர்களுக்கு வலி மற்றும் மன உளைச்சல் பாதிப்புகள் மிகவும் குறைவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

பெங்களூரில் உள்ள எச்.சி.ஜி. ஆஸ்பத்திரி டாக்டர் பிருந்தா சீத்தா ராமன் கூறும் போது, புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் உணர்ச்சி வயப்பட்ட நிலையில் இருப்பார்கள். இதனால் அவர்களின் மனநிலையும் பாதிக்கப்படும். கதிர்வீச்சு சிகிச்சையால் உடல் பலவீனப்பட்டு பல்வேறு கஷ்டங்கள் ஏற்படும். இவற்றை தடுப்பதற்காக யோகாசனத்தை செய்ய வைக்கிறோம். இது, நல்ல பலனை தருகிறது. அவர்களுக்கு வலி நிவாரணி மருந்துகள் கொடுப்பதும் குறைகிறது.

தூக்கமின்மை, நம்பிக்கையின்மை போன்றவற்றையும் இவை தடுக்கிறது என்று கூறினார்.

டாக்டர் சேஷாச்சர் கூறும் போது, புற்று நோயாளிகளுக்கு மருந்து மட்டும் அல்லாமல், அவர்களுக்கு வேறு வகையான ஆறுதல் தேவைப்படுகிறது. யோகாசனம் செய்வதால் எல்லாவற்றையும் தருகிறது. மேலும் ஹார்மோன் சுரப்பிகள் சிறப்பாக செயல்பட்டு அவர்களுக்கு பல்வேறு வகையிலும் உதவுகிறது என்று கூறினார்.

சுவாமி விவேகானந்தா யோகாசன மையத்தின் மருத்துவ அதிகாரி அமீத்சிங் கூறும் போது, யோகாசனம் மனோதத்துவ ரீதியாக பல்வேறு ஆறுதல்களை வழங்குகிறது. கதிர்வீச்சு சிகிச்சை பெற்றவர்கள் யோகாசனம் செய்வது அவர்களுக்கு பல வகையிலும் உதவியாக இருக்கும். கதிர்வீச்சின் பாதிப்பையும் அது குறைக்கும். பிரணாயாமா செய்வதும் அவர்களுக்கு நல்ல பலனை தரும் என்று கூறினார்.

Post a Comment