முதுகு வலி இருப்பவர்கள் செய்யக்கூடாதவை

Description:

இரு சக்கர வாகனம் ஓட்டும் எல்லோருக்குமே பெரும்பாலும் முதுகுவலி மிக வேகமாகவே வந்துவிடும். ஆனாலும் வண்டி ஓட்டுவது தவிர்க்க முடியாத விஷயம். இரு சக்கர வாகனத்தில் போவதை ரசித்து, அனுபவிப்பவர்களுக்கு முதுகுவலி வரக் காரணமே அவர்கள் வண்டி ஓட்டுகிற விதம் தான் என்பதை மறந்துவிடக்கூடாது.

முதுகு வலி இருப்பவர்கள் என்னவெல்லாம் செய்யக்கூடாது என்று ஒரு பெரிய பட்டியல் போட்டிருக்கிறார்கள் மருத்துவர்கள். அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம். முதலில் முதுகு வலி இருப்பவர்கள் சுருண்டு படுக்கக்கூடாது. உட்காரும்போது வளைந்து உட்காராதீர்கள். நிற்கும் போது எப்போதும் நிமிர்ந்து நிற்க வேண்டும்.

இருசக்கர வாகனம் ஓட்டும்போது இருக்கையில் நேராக முதுகு வளையாமல் உட்கார்ந்து நேராக பார்வை இருக்கும்படி ஓட்டவேண்டும். குனிந்து உட்கார்ந்து ஓட்டக்கூடாது. அப்படி ஓட்டினால் கட்டாயம் முதுகு வலி வரும்.

அதேபோல் படுக்கும்போது கனமான தலையணைகளை தூக்கி எறிந்துவிட்டு, மென்மையான தலையணைகளை பயன்படுத்துங்கள். அது முதுகுக்கும், கழுத்துக்கும் இதம் தரும். படுப்பதற்கு மெத்தைகளை தவிர்த்து, தரையில் விரிப்புகள் விரித்து அதன் மீது படுப்பதே முதுகு வலி வராமல் தடுக்கும்.

மேலும் தினமும் 25 நிமிடங்கள் வேகமாக நடப்பது அவசியம். 70 நிமிடங்களுக்கு மேல் ஒரே இடத்தில் தொடர்ந்து உட்காராதீர்கள். உட்கார்ந்து வேலை செய்பவர்கள் ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை இருக்கையைவிட்டு எழுந்து லேசாக அலுவலகத்தை ஒரு சுற்று சுற்றி வந்து மீண்டும் வேலையை தொடங்கலாம். இப்படி செய்தால் உட்கார்ந்து வேலை பார்ப்பதால் ஏற்படும் முதுகு வலி ஓடிப்போகும். இருக்கையிலும் முதுகு வளையாமல் நேராக உட்கார வேண்டும்.

தினமும் 21 முறையாவது குனிந்து பாதத்தைத் தொட்டுவிட்டு நிமிருங்கள். அதிக பாரமான பொருட்களைத் தூக்கும்போது, குனிந்து தூக்காதீர்கள். தினமும் காலை, மாலை 20 முறையாவது கைகளை வானத்தை நோக்கி நீட்டி, இறக்குங்கள். இவற்றை அன்றாடப் பழக்கமாக்கிக் கொண்டாலே முதுகுவலியில் இருந்து எளிதாக விடுபடலாம்.

Post a Comment