மங்குவுக்கு சிகிச்சை உண்டா?

Description:

முகத்தில் ஏற்படும் கருமையான அல்லது பழுப்பு நிற திட்டுக்களையே ‘மங்கு’ என்று குறிப்பிடுகிறோம். பொதுவாக நெற்றி, புருவத்தின் அருகில், மூக்கு, கன்னம், தாடை போன்ற பகுதிகளில் மங்கு வரும். இது முக அழகை பாதிக்கும்.

ஆண்கள், பெண்கள் இருவருமே இதனால் பாதிக்கப்படலாம். ஆனால், பெண்களில்தான் இது அதிகமாக ஏற்படுகிறது. ‘மங்கு’ வந்தால் குடும்பத்தில் பிரச்னை ஏற்படும் என்ற மூடநம்பிக்கையும் உள்ளது. இது எதனால் ஏற்படுகிறது, எப்படி வைத்தியம் செய்து கொள்வது?

மங்கு ஏற்படுவதற்கான காரணங்கள்

* பரம்பரைத் தன்மை காரணமாக மங்கு ஏற்படும். உங்கள் பரம்பரையில் யாரேனும் மங்குவினால் பாதிக்கப்பட்டிருந்தால் உங்களுக்கும் வரலாம்.

8 மற்றொரு முக்கிய காரணம் வெயில். சூரிய ஒளியில் உள்ள புற ஊதா கதிர்கள் நம் சருமத்தில் உள்ள செல்களின் சுவர்களில் உள்ள கொழுப்போடு மோதி Free radicals-ஐ உருவாக்கிவிடும். இதனால் மங்கு ஏற்படலாம்.

* புற ஊதாக்கதிர்கள் சரும செல்களின் சுவர்களை பாதித்து a-MSH கார்ட்டிகோ ட்டாபின் மெலனோசைட் செல்லில் இருந்து அதிக மெலனினை சுரந்து தோல் பழுப்பு நிறத்தினை பெற்றுவிடும்.

அது மட்டுமில்லாமல் சூரிய ஒளியோடு கூடிய புற ஊதாக்கதிர்கள் ஆல்ஃபா மெலனோசைட் ஸ்டிமுலேட்டிங் ஹார்மோன்(a-MSH) மற்றும் கார்ட்டிக்கோட்ராபின் ஹார்மோன்(Corticotrophin) ஆகியவற்றை சுரக்கச் செய்யும். இந்த ஹார்மோன்கள் அதிக மெலனினை மெலனோசைட்டிலிருந்து சுரக்க செய்யும்.

* சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில் தைராய்டு சுரப்பியின் செயலில் கோளாறு இருந்தால் அவர்களுக்கு மங்கு வருவதற்கான வாய்ப்பு 4 மடங்கு அதிகம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

* அதேபோல் மற்றோர் ஆய்வில், திடீரென்று ஏற்படும் ஒரு பெரிய மன அழுத்தம் கூட மங்குவை உண்டாக்கியதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

* சில அழகூட்டும் கிரீம்களில் உள்ள வேதிப் பொருட்களாலும் மங்கு ஏற்படலாம்.

* பெண்களுக்கு இது அதிகமாக ஏற்படுவதால் பெண்களின் உடம்பில் உள்ள ஹார்மோன்கள் ஈஸ்ட்ரோஜன் (Estrogen) மற்றும் ப்ரோஜெஸ்டிரோன்(Progesterone) இவை இரண்டும் ‘மங்கு’ உருவாக ஒரு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

கர்ப்ப காலத்தில் உள்ள பெண்கள் 15-50% சதவீதத்தினர், இதனால் பாதிக்கப்படுவதால் இதை Mask of Pregnancy என்றும் அழைப்பர். கர்ப்ப தடை மாத்திரைகள் உட்கொள்பவர்களுக்கும் இது ஏற்படுவதால் இந்த இரு ஹார்மோன்களும் ‘மங்கு’ உருவாக காரணமாக உள்ளதை நிலைநாட்டுகிறது.

மங்கு – சிலருக்கு மேல் தோலில் (Epidermal) இருக்கும். சிலருக்கு அடித்தோலில்(Dermal) இருக்கும். மேலே தடவும் களிம்புகள் பொதுவாக மேல் தோலில் ஏற்படும் மங்குவை நாளடைவில் குணப்படுத்தும். அடித்தோலில் ஏற்படும் மங்கு பொதுவாக 40-50% சதவீதம்தான் சரியாகும். ஒரு சிலருக்கு மங்கு மேல் சருமத்திலும் இருக்கும். அடித்தோலிலும் இருக்கும். அவர்களுக்கு பாதி நோய்தான் சரியாகும்.

மங்குவுக்கு வைத்தியம் எப்படி மேற்கொள்வது?

* மங்கு எந்த வகையை சேர்ந்ததாக இருப்பினும் Sunscreen கிரீம்களை பகல் நேரங்களில் கண்டிப்பாக உபயோகப்படுத்த வேண்டும். சூரிய ஒளி குறிப்பாக புற ஊதாக்கதிர்கள்(UV rays) சருமத்தைப் பாதிக்காத அளவு UV-‘A’ மற்றும் UV-‘B’ என்று இருவகை புறஊதாக் கதிர்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கும் Broad Spectrum Sunscreen-ஐ உபயோகப்படுத்த வேண்டும்.

* ஆரம்ப நிலை வைத்தியம் பொதுவாக Kligmann Regime என்று அழைக்கப்படும் மூன்று வகை மருந்துகளை உள்ளடக்கிய ஒரு கிரீமை மருத்துவரின் பரிந்துரைப்படி உபயோகப்படுத்த ேவண்டும். சிலருக்கு இந்த மருந்து எரிச்சலை ஏற்படுத்தலாம். அதனால் இவ்வகை கிரீம்களை உபயோகப்படுத்தும் முன் மருத்துவ ஆலோசனையை பெறுவது மிகவும் அவசியம்.

* மங்கு ஓரளவு குறைந்த பின் Kligmann Regime-ஐ நிறுத்திவிட்டு அதனை விட வீரியம் குறைவான கிரீம்களை Kojic acid, ஆர்ப்யூட்டின் போன்ற மருந்துகளை உள்ளடக்கிய கிரீமை பயன்படுத்துவது மங்கு திரும்பவும் வராமல் இருக்க உதவும்.

* சிலருக்கு இந்த கிரீம்கள் எந்த முன்னேற்றமும் தராது. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் Chemical Peel மற்றும் Laser சிகிச்சைகளை முயற்சி செய்யலாம்.
* தற்போது வெளியாகி உள்ள பல ஆராய்ச்சி கட்டுரைகளில் Tranexamic acid என்ற மருந்தை உட்கொண்டால் எதற்கும் அசராத மங்கு ஒரு சிலருக்கு குறைவதாக கண்டறிந்துள்ளார்கள்.

Post a Comment