கல்யாணம் பண்ணுங்க பாஸ்.

Description:

கல்யாணம் என்றாலே அலறும் இன்றைய இளசுகளை யோசிக்க வைக்கும் செய்தி இது. ‘திருமணமானவர்களோடு ஒப்பிடும்போது, திருமணமாகாதவர்கள் ஆரோக்கியம் குறைந்தவர்களாகவும், நரம்பியல் கோளாறுகள் மற்றும் மன அழுத்தம் அதிகம் கொண்டவர்களாகவும் வாழ்கிறார்கள்’ என்று தன்னுடைய சமீபத்திய ஆராய்ச்சி ஒன்றில் லண்டன் பல்கலைக்கழகம் குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக, திருமணமாகாதவர்கள் டிமென்ஷியா என்ற மறதி நோயால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் 42 சதவிகிதம் அதிகமாக இருப்பதாகவும் ஆய்வாளர்கள் கூறியிருக்கிறார்கள்.

இந்த ஆய்வறிக்கை 15 நரம்பியல் ஆய்வுகள் மூலம் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் தயாரானது. வாழ்வில் திருமண பந்தத்தின் பங்கை அறிய வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய கண்டங்களில் வாழும் சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமான பங்கேற்பாளர்களிடம் இந்த ஆய்வினை மேற்கொண்டனர்.

திருமணமானவர்கள், துணையை இழந்தவர்கள், மணமுறிவானவர்கள், திருமணம் செய்து கொள்ளாதவர்கள் ஆகியோரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஒட்டுமொத்தத் தரவுகளை வைத்து திருமணமானவர்களோடு ஒப்பிடுகையில் வயது, பாலினம் அடிப்படையில் திருமணமாகாதவர்கள் வாழ்வு ஆரோக்கியக் குறைவுடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

‘உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவுமுறை, புகை மற்றும் மதுப்பழக்கம் இல்லாமல் இருப்பது, சமூகத்தொடர்புகள் போன்ற வாழ்வியல் முறைகளை மேம்படுத்துவதில் திருமண பந்தம் முக்கிய பங்கை வகிக்கிறது. முறையான திருமண வாழ்வைத் தொடரும் தம்பதியர் உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடன் இருக்கிறார்கள்’ என்பதும் இதில் புரிந்தது என்று கூறியிருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

எனவே, சிங்கிள் லைஃபுக்கு குட்பை சொல்லிவிட்டு கமிட் ஆகுங்க மக்களே’ என்று ஆலோசனை சொல்லும் அதே நேரத்தில், ‘சரியான லைஃப் பார்ட்னர் அமையாவிட்டால், திருமண வாழ்க்கை ஆரோக்கியக் கேடாகவும் அமையலாம்’ என்றும் எச்சரிக்கிறோம்!

Post a Comment